இல்லறவியல்

18. வெஃகாமை

( பிறர் பொருளை கவர விரும்பாமை )

171. நடுவின்றி நன்பொருள் வெஃகிற் குடிபொன்றிக்
        குற்றமு மாங்கே தரும்.

172. படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
        நடுவன்மை நாணு பவர்.

173. சிற்றின்பம் வெஃகி யறனல்ல செய்யாரே
        மற்றின்பம் வேண்டு பவர்.

174. இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
        புன்மையில் காட்சி யவர்.

175. அஃகி யகன்ற வறிவென்னாம் யார்மாட்டும்
        வெஃகி வெறிய செயின்.

176. அருள்வெஃகி யாற்றின்க ணின்றான் பொருள்வெஃகிப்
        பொல்லாத சூழக் கெடும்.

177. வேண்டற்க வெஃகியா மாக்கம் விளைவயின்
        மாண்டற் கரிதாம் பயன்.

178. அஃகாமை செல்வத்திற் கியாதெனின் வெஃகாமை
        வேண்டும் பிறன்கைப் பொருள்.

179. அறனறிந்து வெஃகா வறிவுடையார்ச் சேருந்
        திறனறிந் தாங்கே திரு.

180. இறலீனு மெண்ணாது வெஃகின் விறலீனும்
        வேண்டாமை யென்னுஞ் செருக்கு.



குறள் 171

நடுவின்றி நன்பொருள் வெஃகிற் குடிபொன்றிக்
குற்றமு மாங்கே தரும்.

நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்.


சொல்லுரை:

நடுவின்றி - நடுவு நிலைமை இன்றி , அநியாயமாக

நன்பொருள் - பிறருக்கு அறவழியில் வந்த நல்ல பொருளை

வெஃகின் - கைப்பற்ற விரும்பினால், அபகரிக்க விரும்பினால்

குடிபொன்றிக் - அதனால் அவன் குடி அழிந்து

குற்றமும் - பல்வேறு குற்றங்களையும்

ஆங்கே - அவ்விடத்தே

தரும் - கொடுக்கும்


பொருளுரை:

நடுவு நிலைமை இன்றி அநியாயமாக பிறருக்கு அறவழியில் வந்த நல்ல பொருளை கைப்பற்ற விரும்பினால் அதனால் அவன் குடி அழிந்து பல்வேறு குற்றங்களையும் அவ்விடத்தே கொடுக்கும்.


விளக்கவுரை:

வெஃகுதல் – பிறர் பொருளை கைப்பற்ற விரும்புதல். பிறர்பொருளையும் தம்பொருள்போல் கருதி, தம் பொருளின் மேல் தனக்கு எவ்வளவு உரிமை உண்டோ அதேபோல் பிறருக்கும் அவர்களின் பொருள்மீது உரிமை உண்டு என்பதை உணர்ந்து, பிறர் பொருளுக்கு மதிப்பளித்து நடந்துகொள்வதே நடுவுநிலைமையாகும். அறவழியில் ஈட்டப்பட்ட பொருளை ‘நன்பொருள்’ என்றார். குடிபொன்றுதல் என்பது ஒருவனுடைய குடியானது மிகவும் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டு அந்தக் குடி மெல்ல மெல்ல அழியத்தொடங்கும் என்பதாம். குடி அழிவது மட்டுமின்றி தன் மீதும் தன் குடும்பம் மீதும் பல குற்றங்கள் வந்து சேரும்.



குறள் 172

படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர்.

படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர்.


சொல்லுரை:

படுபயன் - பிறர் செல்வத்தைக் கவர்வதால் வரும் பயனை

வெஃகிப் - விரும்பி

பழிப்படுவ - பழி உண்டாக்கும் செயல்களை

செய்யார் - செய்யமாட்டார்

நடுவன்மை - நடுவுநிலை அல்லாதவைகளைக் கண்டு

நாணு பவர் - அஞ்சுவோர், நாணுவோர்


பொருளுரை:

பிறர் செல்வத்தைக் கவர்வதால் வரும் பயனை விரும்பி பழி உண்டாக்கும் செயல்களை செய்யமாட்டார் நடுவுநிலை அல்லாதவைகளைக் கண்டு நாணுவோர்.


விளக்கவுரை:

பிறர் பொருளைக் கவருவதால் அப்போதைக்கு சில பயன்பாடுகளைக் கொடுத்தாலும் அதனால் உண்டாகும் தீமைகள் பல. பிறர் பொருளைக் கவருவதால் நடுவு நிலைமை தவறுகிறான்; நாணுடைமை துறக்கின்றான்; பழிகளுக்கு ஆளாகின்றான். இதற்குப் பின் ஒருவன் வாழ்ந்து என்ன பயன் ?



குறள் 173

சிற்றின்பம் வெஃகி யறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர்.

சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர்.


சொல்லுரை:

சிற்றின்பம் - பிறர் பொருளைக் கவர்வதால் வரும் நிலையற்ற இன்பத்தை

வெஃகி - விரும்பி

அறனல்ல - அறம் அல்லாதவைகளை

செய்யாரே - செய்யமாட்டார்

மற்றின்பம் - நிலையான இன்பத்தை

வேண்டு பவர் - விரும்புபவர்


பொருளுரை:

பிறர் பொருளைக் கவர்வதால் வரும் நிலையற்ற இன்பத்தை விரும்பி அறம் அல்லாதவைகளைச் செய்யமாட்டார் நிலையான இன்பத்தை விரும்புபவர்.


விளக்கவுரை:

பிறர் பொருளைக் கவர்வதால் வருவது நிலையில்லாத, சிறிதளவும் நன்மையுண்டாக்காத தீய இன்பமே. ஆனால், அது அறமற்ற செயலாதலால் ஒருவனை நல்வழிக்கு இட்டுச்செல்லாது. நிலையான இன்பத்திற்கு வழி வகுக்காது.



குறள் 174

இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர்.

இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர்.


சொல்லுரை:

இலமென்று - ஒன்றும் இல்லை என்று

வெஃகுதல் - பிறர் பொருளை விரும்புதலை

செய்யார் - செய்யமாட்டார்

புலம்வென்ற - ஐம்புலன்களையும் வென்ற

புன்மையில் - குற்றம் இல்லாத

காட்சி யவர் - அறிவுடையோர்


பொருளுரை:

ஐம்புலன்களையும் வென்ற குற்றம் இல்லாத அறிவுடையோர் ஒன்றும் இல்லை என்று பிறர் பொருளை விரும்புதலைச் செய்யமாட்டார்.


விளக்கவுரை:

புலம் வெல்லுதல் என்பது தீய வழியில் இன்பம் அடைய முற்படாது மனத்தை அடக்கி ஆளுதல். ‘புன்மையில் காட்சியவர்’ என்பது பிறர் பொருள் மீது தமக்கு எவ்வித உரிமையும் இல்லை என்பதையும் அதனைக் கவர்வதால் தனக்குப் பழியும் வறுமையும் உண்டாகுமென்றும், அது இம்மையிலும் மறுமையிலும் இன்பமின்றி துன்பத்தையே கொடுக்கும் என்பதை ஐயந்திரிபற உணர்தல். தன்னிடம் ஒரு பொருள் இல்லாத நிலையிலும் பிறர் பொருளை கவர விரும்பாதிருத்தலே நல்லறமாகும்.



குறள் 175

அஃகி யகன்ற வறிவென்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின்.

அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின்.


சொல்லுரை:

அஃகி - மிகவும் நுட்பமானதாய்

அகன்ற - விரிந்த

அறிவு - அறிவினால்

என்ஆம் - என்ன பயன் உண்டாகும் ?

யார்மாட்டும் - யாவரிடத்தும்

வெஃகி - பிறர் பொருளை விரும்பி

வெறிய - அறிவுக்கு ஒவ்வாத வெறிச்செயல்களை

செயின் - செய்வாரானால்


பொருளுரை:

யாவரிடத்தும் பிறர் பொருளை விரும்பி அறிவுக்கு ஒவ்வாத வெறிச்செயல்களைச் செய்வாரானால் மிகவும் நுட்பமானதாய் விரிந்த அறிவினால் என்ன பயன் உண்டாகும்?


விளக்கவுரை:

யார்மாட்டும் என்றது நல்லவர், தீயவர், பெரியவர், சிறியவர், ஆடவர், பெண்டிர், நலமுடையோர், நலிந்தோர் என எவ்வகை பாகுபாடும் இன்றி அவர்களிடம் இருந்து பொருளைக் கவர விரும்புவது. இதை ஒரு வெறிச்செயல் என்கிறார். ஒருவன் மிகவும் நுட்பமானதையும் அறியும் தன்மையுடையவன் ஆயினும் அந்த அறிவினை பிறர் பொருளை கவருவதற்கு பயன்படுத்தினால் என்ன பயன்? பயன் ஒன்றுமில்லை. அவ்வறிவினை புலன்களை வெல்வதற்கும் தன்னிடமுள்ள குற்றங்களை நீக்குவதற்கும் பயன்படுத்தவேண்டும்.



குறள் 176

அருள்வெஃகி யாற்றின்க ணின்றான் பொருள்வெஃகிப்
பொல்லாத சூழக் கெடும்.

அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்
பொல்லாத சூழக் கெடும்.


சொல்லுரை:

அருள்வெஃகி - அருளாகிய அறத்தை விரும்பி

ஆற்றின்கண் - அறநெறியின்கண்

நின்றான் - நின்றவனது

பொருள்வெஃகிப் - பொருளை விரும்பி

பொல்லாத - பொல்லாத குற்றங்களைச் செய்ய

சூழக் - எண்ணினால்

கெடும் - அவன் கெட்டழிவான்


பொருளுரை:

அருளாகிய அறத்தை விரும்பி அறநெறியின்கண் நின்றவனது பொருளை விரும்பி பொல்லாத குற்றங்களைச் செய்ய எண்ணினால் அவன் கெட்டழிவான்.


விளக்கவுரை:

இல்லறத்தான் உதவும் குணத்திற்கும், ஈகைக் குணத்திற்கும் அடிப்படையாக அருட்குணம் வேண்டும். அதற்கடுத்து, அறவழியில் ஈட்டிய பொருள் வேண்டும். அவ்வாறு ஈட்டிய பொருளையே அருட்குணத்தை உடையவன் பிறர்க்குக் கொடுத்து உதவ முடியும். அவ்வாறு அருட்குணத்தை உடையவன் அறவழியில் ஈட்டிய பொருளை கவர நினைப்பது பொல்லாத குற்றமாகும். கவர நினைப்பவன் கெட்டழிவதும் உறுதி.



குறள் 177

வேண்டற்க வெஃகியா மாக்கம் விளைவயின்
மாண்டற் கரிதாம் பயன்.

வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்
மாண்டற் கரிதாம் பயன்.


சொல்லுரை:

வேண்டற்க - கைவிடுக

வெஃகியாம் - பிறர் பொருளை கவருவதால் உண்டாகும்

ஆக்கம் - செல்வத்தை

விளைவயின் - அதன் பயன் தரும்போது

மாண்டற்கு - நன்மையளிப்பது

அரிதாம் - இல்லை

பயன் - அந்தப் பயன்


பொருளுரை:

பிறர் பொருளைக் கவருவதால் உண்டாகும் செல்வத்தைக் கைவிடுக. அந்த செல்வம் பயன் தரத் தொடங்கும்போது அதனால் எந்த நன்மையும் உண்டாவது இல்லை. தீமையே உண்டாகும்.


விளக்கவுரை:

மாண்டற்கு – புகழ் பெறுவது, சிறப்பு பெறுவது. பிறர் பொருளைக் கவர விரும்பி அதனால் வரும் செல்வப்பெருக்கை விரும்பாது இருத்தல் வேண்டும். அந்த செல்வப் பெருக்கினால், உண்டாக்கப்படும் விளைவுகள் நன்மையையோ, புகழையோ சிறப்பையோ அளிப்பதில்லை. மாறாக, துன்பக் கேட்டையே தரும்.



குறள் 178

அஃகாமை செல்வத்திற் கியாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்.

அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்.


சொல்லுரை:

அஃகாமை - குறையாதிருப்பதற்கு வழி

செல்வத்திற்கு - செல்வத்திற்கு

யாதெனின் - எது என்றால்

வெஃகாமை - விரும்பாமை

வேண்டும் - வேண்டும்

பிறன் - பிறனுடைய

கைப்பொருள் - கைப்பொருளை, செல்வத்தை


பொருளுரை:

ஒருவன் தன்னுடைய செல்வம் குறையாதிருப்பதற்கு வழி எது என்றால் பிறனுக்கு உரிமையான செல்வத்தை விரும்பாது இருத்தல் ஆகும்.


விளக்கவுரை:

ஒருவன் தன் செல்வப்பெருக்கை தக்கவைத்துக் கொள்ளவேண்டும் என்றால் பிறருக்கு உரிமையான பொருளைத் தனக்கு உரிமையானதாக ஆக்கிக்கொள்ள முனைந்து செல்வப் பெருக்கை அடைய முனையக்கூடாது. அவ்வாறு செய்வதால் செல்வம் பெருகுவதற்குப் பதிலாகக் குறையவே செய்யும். செல்வம் குறைந்து கொடிய வறுமை நிலையையும் அடைவான்.



குறள் 179

அறனறிந்து வெஃகா வறிவுடையார்ச் சேருந்
திறனறிந் தாங்கே திரு.

அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
திறன்அறிந் தாங்கே திரு.


சொல்லுரை:

அறனறிந்து - அறம் இதுவென அறிந்து

வெஃகா - பிறர் பொருளை விரும்பாத

அறிவுடையார்ச் - அறிவுடையோரை

சேரும் - சேரும்

திறன்அறிந்து - அவர் தகுதியை அறிந்து

ஆங்கே - அவரிடம்

திரு - திருமகள், செல்வம்


பொருளுரை:

அறம் இதுவென அறிந்து பிறர் பொருளை விரும்பாத அறிவுடையோரை அவர் தகுதியை அறிந்து அவரிடம் செல்வம் சேரும்.


விளக்கவுரை:

அறத்தின் தன்மையை முழுதுணர்ந்து, பிறர் பொருளைக் கவர நினைக்காத உயர்தன்மையானவர்களே அறிவுடையவர்களாவர். அவ்வகைப்பட்ட அறிவுடைய மக்களிடமே, அவர்களின் செயல்திறனுக்கு ஏற்பவும், நல்நெறியில் செய்யப்படும் முயற்சிகளுக்கு ஏற்பவும் திருமகள் செல்வங்களைச் சேர்ப்பதற்கு வழிவகை செய்வாள்.



குறள் 180

இறலீனு மெண்ணாது வெஃகின் விறலீனும்
வேண்டாமை யென்னுஞ் செருக்கு.

இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்
வேண்டாமை என்னுஞ் செருக்கு.


சொல்லுரை:

இறலீனும் - அழிவைத் தரும்

எண்ணாது - பின் விளைவுகளை எண்ணாது

வெஃகின் - பிறர் பொருளை விரும்பினால்

விறல்ஈனும் - வெற்றியைத் தரும்

வேண்டாமை - பிறர் பொருளை விரும்பாமை

என்னுஞ் - என்னும்

செருக்கு - எண்ணமானது


பொருளுரை:

பின் விளைவுகளை எண்ணாது பிறர் பொருளை விரும்பினால் அழிவைத் தரும். பிறர் பொருளை விரும்பாமை என்னும் எண்ணமானது வெற்றியைத் தரும்.


விளக்கவுரை:

பிறர்பொருளை கவர நினைப்பதினால் உண்டாகும் பின்விளைவுகள் பல. அது ஒருவனுக்கு அழிவையே உண்டாக்கும். பின் விளைவுகளை ஆராய்ந்து அறிவோர் பிறர் பொருளை விரும்புவது இல்லை. பிறர் பொருளை விரும்பாமை என்னும் எண்ணச்செருக்கை தன் மனத்தில் இருத்தி அதன் வழியில் வாழ்பவனுக்கு வாழ்வில் என்றும் வெற்றியே கிட்டும். ‘வேண்டாமை என்னும் செருக்கு’ ஒரு உயர்ந்த மனநிலை ஆகும்.



uline